மஹாவிஷ்ணுவுக்கு பூசை செய்துக் கொண்டு இருந்த அரசன் ஒருவன் துர்வாச முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் கோபமடைந்த முனிவர், அவனை யானையாக மாறும்படி சபித்தார். மன்னன் சாபவிமோசனம் கேட்க, 'ஒரு முதலை உன் காலைப் பிடித்து இழுக்கும்போது நீ மஹாவிஷ்ணுவை அழைக்க, அவரால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்' என்றார். அந்த யானை கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரத்தில் வசித்து வந்தது.
ஒரு சமயம் இங்குள்ள கபில தீர்த்தத்தில் நீர் அருந்த இறங்கியபோது, அகத்திய முனிவரால் சாபமிடப்பட்டு முதலையாக மாறிய அரக்கன் ஒருவன், யானையின் காலைப் பிடித்து இழுத்தான். யானை 'ஆதிமூலமே' என்று அலற, மகாவிஷ்ணு கருடவாகனத்தில் வந்து தமது சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று மோட்சம் அளித்தார்.
அதனால் இத்தலத்து மூலவர் கஜேந்திர வரதன் என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம். காவிரி ஆற்றின் கரையில் இத்தலம் அமைந்திருப்பதால் 'ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்' என்று அழைப்பார்கள். தாயார் 'ரமாமணிவல்லி' என்றும் 'பொற்றாமரையாள்' என்றும் அழைக்கப்படுகின்றார். சிறிய திருவடிக்கும், கஜேந்திரனுக்கும் பெருமாள் இங்கு பிரத்யக்ஷம்.
பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களுள் ஒன்று. திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கோவிலூர் பிற க்ஷேத்திரங்கள்.
திருமழிசையாழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார். கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|